×

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு: தமிழக அரசு சார்பில் தேவையான நிவாரணம் குறித்து 72 பக்க மனு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 9 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கடும் சேதமடைந்தன. பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக அமைச்சர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சீரமைப்பு பணிகளும் இரவு, பகலாக நடந்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த பேய் மழையால் கடும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதால், இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் பேட்டியளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தமிழ்நாட்டு மழை, வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது’ என கூறி கைவிரித்தார். நிதி ஒதுக்கீடு குறித்தும் அவர் முறையாக விளக்கம் அளிக்கவில்லை. தேசிய பேரிடர் நிதியில் இருந்து ஆண்டுதோறும் விடுவிக்கப்பட வேண்டிய நிதியைதான் தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு கொடுத்து உள்ளது. கூடுதலாக ஒன்றிய அரசு சார்பில் ஒரு ரூபாய் கூட இதுவரை தரவில்லை.

இந்த சூழலில், நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. மக்கள் துயரத்தில் தவித்து கொண்டிருக்கும் நிலையில், சேதங்களை பிரதமரோ அல்லது ஒன்றிய அமைச்சர்களோ யாரும் பார்க்காத நிலையில் நிர்மலா சீதாராமன் அதிகார தோரணை அரசியல் பேச்சுக்கு மக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நிர்மலா சீதாராமன் வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதேபோல் பிரதமர் மோடியும் ஒரு வாரத்துக்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு தென்மாவட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மழை வெள்ளம் பாதிப்பால் சேதமடைந்த பகுதிகள் குறித்த புகைப்படங்கள் கண்காட்சியை பார்வையிட்டார். அப்போது சேதமடைந்த பகுதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.அதனை தொடர்ந்து அவர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்பி, பல்வேறு துறை ஐஏஎஸ் அதிகாரிகள் எஸ்.கே.பிரபாகர், ககன்தீப்சிங் பேடி, கார்த்திகேயன், ராஜேஷ் லக்கானி, அபூர்வா, பிரகாஷ், கலெக்டர்கள் தூத்துக்குடி லட்சுமிபதி, நெல்லை கார்த்திகேயன், எஸ்பி பாலாஜி சரவணன், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

அப்போது நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘எதிர்காலத்தில் வெள்ள பாதிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தால் அனைத்து அதிகாரிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை வகுக்க வேண்டும். நீர்நிலைகளில் உடைப்புகள் அல்லது கொள்ளளளவை மீறி நிரம்பி வழியும் சந்தரப்பங்களில் ஒரு வலுவான முன்னெச்சரிக்கை அமைப்பு முறை நிறுவ வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெற்றுள்ள கடன் மற்றும் பயிர்கள் கடன்கள் மறுசீரமைப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார். இதையடுத்து, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தேவையான நிவாரணம் குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு 72 பக்க கோரிக்கை மனுவை அளித்தார்.

மாலையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிநகர் பகுதிகள், சேதமடைந்த கோரம்பள்ளம் குளம், அந்தோணியார்புரம் பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் சேதமடைந்த குடிநீரேற்று நிலையம், ஸ்ரீவைகுண்டம் கோயில், அரசு மருத்துவமனை, பொன்னன்குறிச்சியில் சேதமடைந்த வீடுகள், ஏரல் ராஜபதி பகுதியில் பயிர் சேதங்கள், மின்கம்பங்கள் சேதம், ஏரலில் சேதமடைந்த பாலம், வணிக நிறுவனங்கள் மற்றும் வாழவல்லான் பகுதியில் மின்கோபுரம், தாமிரபரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருக்கு தமிழ்நாடு உயர் அதிகாரிகள் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.

* தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை நிர்மலா சீதாராமன் மீண்டும் திட்டவட்டம்
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காட்டில் நேற்றிரவு வெள்ள சேதங்களை பார்வையிட்டு பொதுமக்களிடமும் பாதிப்புகள் பற்றி கேட்டறிந்தார். அப்போது ஒருவர், ‘தென்மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார். அவரது பேச்சை கவனமுடன் கேட்டுக் கொண்ட ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தென்மாவட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை. இதுவரை தேசிய பேரிடர் என்று எங்கும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு என சில விதிமுறைகள் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.

* பாஜவினருக்கு மட்டும் அனுமதி
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மதியம் 12.45 மணி முதல் மதியம் 2.15 வரையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் அதிகாரிகள், அமைச்சர்கள் தவிர யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் பாஜவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாநில நிர்வாகிகள் பொன் பாலகணபதி, சசிகலா புஷ்பா ஆகியோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு: தமிழக அரசு சார்பில் தேவையான நிவாரணம் குறித்து 72 பக்க மனு appeared first on Dinakaran.

Tags : Union Finance Minister ,Nirmala Sitharaman ,Thoothukudi district ,Tamil Nadu government ,Thoothukudi ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...